Wednesday, 6 June 2012

தஞ்சை கோயில்

பலகோடி நூறாண்டு நம் தஞ்சை கோயில் வாழ வேண்டும் ! ! !

இதை படிப்பதற்கே தலை சுற்றுகிறது , 
இது எப்படி சாத்தியமானது ? ? ! ! 
கோயில் எப்படி கட்டப்பட்டது ???? என்ற தகவல் உங்களுக்காக.

படிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்திவிட வேண்டாம்.. இதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டும் .

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.


இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..

பெரிய கோயில் அளவுகோல்...

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார்

1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு



180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின்

13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.

சாரங்களின் அமைப்பு

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆதஅஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத்துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.

அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. !! 


Sunday, 25 March 2012

சேர்த்து வைத்திருக்கும் இந்த அணுக் கழிவுதான் கடைசி சொத்தா?!


    அரசு தம்வசம் வந்த பின்பும் அரசியல்வாதிகளின் நரித்தனம் மாறுவதே இல்லை. அதனால்தான் மக்களின் காவலனாக இருக்க வேண்டியவர்கள், மக்கள் அசந்த நேரமாகப் பார்த்து வஞ்சகத்தை அரங்கேற்றுகிறார்கள். மக்களை தமது விரோதிகளாக பாவித்து அதிகாரத்தை செலுத்தும் இவர்களின் ஒரே நம்பிக்கை நமக்கு ஒரு நாளும்ஜட்ஜ்மென்ட் டேஇல்லை என்ற நம்பிக்கைதான்.

    கூடங்குளத்தால் எந்த ஆபத்தும் இல்லை, தாராளமாக உடனே திறக்கலாம், அந்தப் பகுதி மக்களுக்கு ரூ 500 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கலாம் என்றெல்லாம் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததைக் கேட்டதும் இப்படித்தான் எழுதத் தோன்றியது.

    எந்த ஆபத்தும் இல்லாத ஒரு திட்டம் என்றால், அப்புறம் எதற்கு ரூ 500 கோடி ஒதுக்கீடு? கூடங்குளம் சுற்றுவட்டாரத்தின் நீண்ட கால கருமாதி செலவுக்கா? நல்ல திட்டம் என்றால் அந்தப் பகுதி தானாகவே வளர்ந்துவிடுமேஉள்கட்டமைப்பு வசதிகள் இயல்பாகவே கிடைக்குமே. தங்கள் வழக்கப்படி ரூ 500 கோடி லஞ்சம் தருகிறார்கள், ஒரு பெரும் ஆபத்தைத் தலையில் கட்ட!
இரண்டு மாதங்களுக்கு முன் மக்களுக்கு விரோதமான ஒரு திட்டமாக ஜெயலலிதாவுக்குத் தெரிந்த கூடங்குளம், இன்றைக்கு அற்புதமான திட்டமாக மாறியிருப்பதன் பின்னணி நிபுணர் குழு அறிக்கையா, டெல்லியில் படிந்த பேரமா? புரியவில்லை.

    கூடங்குளம், ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளை இன்று நேரில் பார்த்து செய்தி சேகரிக்கப் போன நமது நிருபர், “சார், ஏதோ பெரிய யுத்தம் நடப்பதற்கான ஏற்பாடுகள் மாதிரி இருக்கு. உண்ணாவிரதத்துக்கு ஆதரவா வந்த அத்தனை பேரையும் கைது பண்ணிட்டாங்க. லூர்து மாதா சர்ச்சுக்குள் உண்ணாவிரதம் இருப்பவர்களை மட்டும் எதுவும் பண்ண முடியல. அதனால, பலவந்தமா உள்ளே புகுந்து குண்டர் சட்டம் மாதிரி ஏதோ ஒரு பிரிவில் கைது பண்ண ஆணையோடு காத்திருக்காங்க. பஸ் போக்குவரத்தை இரண்டு நாட்களாக அடியோடு நிறுத்திவிட்டார்கள். மக்கள் நடமாட்டம் என்பதே இல்லை. சாலையில் பொதுமக்கள் நடக்கக் கூட அனுமதி இல்லை. நாம இருப்பது தமிழ்நாடுதானான்னு சந்தேகமா இருக்கு,” என்றார்.

    இன்னொரு முக்கிய விஷயம், ‘இங்கு பத்திரிகையாளர்கள் யாரும் இருக்கக் கூடாது. மீறி இருந்தா உங்க உயிருக்கு நாங்க பொறுப்பேற்க முடியாதுஎன்று மிரட்டி வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள் போலீசார்.
மக்களுக்கு எந்த அளவு பகையாளியாக மாறி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன மத்திய மாநில அரசுகள் என்பதற்கு இந்த நிலை ஒரு சாட்சி. ஜெயலலிதா உண்மையிலேயே துணிச்சலும் இம்மியளவுக்காவது நேர்மையும் மிக்க ஆட்சியாளராக இருந்திருந்தால், இந்த முடிவை வெள்ளி அல்லது சனிக்கிழமை எடுத்திருக்கலாம். சங்கரன்கோயில் தேர்தலுக்காக காத்திருந்து, தேர்தல் முடிந்த அடுத்த நாளே தன் வேலையைக் காட்டுகிறார்.

    எந்த மக்கள் ஜெயா தங்கள் காவல் அரணாக நிற்பார் என நம்பினார்களோ, அந்த மக்களையே அடித்து நொறுக்கி, அரசின் முடிவை தலையில் திணிக்கும் வஞ்சகத்துடன் இத்தனை நாளும் அமைதி காத்திருக்கிறார் ஜெயலலிதா என்ற விமர்சனத்தில் இம்மியளவும் மிகையில்லை!

    கைநீட்டி ஓரிடத்தில் கமிஷன் பெற்றுவிட்டால், தங்களுக்கு அளிக்கப்பட்ட வேலை எத்தனை மாபாதகமாக இருந்தாலும் அதை நிறைவேற்ற ஏஜென்டுகள் படாத பாடுபடுவார்கள். மன்மோகன் சிங் அரசை அந்த கமிஷன் ஏஜென்டாகத்தான் இன்று உலக நாடுகள் பார்க்கின்றன.

    அப்துல் கலாமை நல்ல மனிதர் என்று நம்பிக்கொண்டிருந்த படித்த சமூகத்துக்கு, அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. காரணம் இந்த கமிஷன் ஏஜென்டுகளின் அறிவிக்கப்படாத தூதுவராய் அவர் வந்ததுதான். உதயகுமாருக்கு அணுஉலை பற்றி ஒன்றுமே தெரி்யாது என்பவர்களுக்கு, அணு உலை விஷயத்தில் அப்துல்கலாமின் ஞானமும் உதயகுமார் அளவுக்குதான் என்பது புரியாமல் போனதை என்னவென்பது?
அணு உலையின் பாதிப்பு குறித்து, அதை முழுமையாக அறிந்த விஞ்ஞானிகளின் அசைக்க முடியாத விளக்கங்கள், ஆய்வு முடிவுகளை உதயகுமார் தலைமையிலான போராட்டக்குழு முன்வைத்துள்ளது. அதற்கு இதுவரை மத்திய அரசும், உலையை உருவாக்கிய ரஷ்ய அரசும் ஒரு சின்ன மறுப்பு கூட தரவில்லை. அவர்களால் ஒரு போதும் தர முடியாது.

    இந்த அணுஉலைக்காக பேச்சிப்பாறை அணை நீரைத்தான் உறிஞ்சப்போகிறார்கள். ஏற்கெனவே தண்ணீர்ப் பஞ்சத்தில் அடிபட்டுக்கிடக்கும் தமிழக விவசாயியின் வயிற்றிலடிக்கும் செயல் இது.

    அணு உலைகள் விஷயத்தில் உலக நாடுகள் கையைச் சுட்டுக் கொண்டு, மீண்டும் தங்கள் பழைய முறை மின் உற்பத்திக்குத் திரும்ப, இந்தியா மட்டும் மாநிலத்துக்கு நான்கு மெகா அணு சுடுகாடுகளை உருவாக்குவதே முதல் வேலை என்று முடிவெடுத்திருப்பது இந்தியர்களின் சாபக்கேடு.

    திரும்பத் திரும்ப இந்த அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தைக் குறைசொல்லும் பேர்வழிகள் ஒன்றைப் புரிந்து கொள்ளவில்லை அல்லது தெரிந்து கொள்ளவில்லை அல்லது எல்லாம் தெரிந்தும் நாடகமாடுகிறார்கள் (அது அவர்களின் பிறவிக் குணமாகவும் இருக்கலாம்!)

பாதிப்பு-1
    கூடங்குளம் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இந்த போராட்டம் நடக்கிறது. அன்று உதயகுமாரோ இப்போதுள்ள வேறெவருமோ இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் எதிர்ப்பு மிகக் கடுமையாக இருந்தது. அதன் விளைவு, கூடங்குளம் கட்டுமானப் பணி திட்ட தொடக்க விழாவை அறிவித்து பின் ரத்து செய்தது மத்திய அரசு.
கல்பாக்கம் அணு மின் நிலையத்தால் ஒரு பாதிப்பும் இல்லை. எல்லோரும் சுகவாசிகளாக இருப்பதாக சிலர் பொய்யை அவிழ்த்துவிடுகின்றனர். அதற்கு துணைபோகின்றன ஒரு சில ஈனத்தனமான பத்திரிகைகளும். குறிப்பிட்ட இனத்துக்காக மட்டுமே செயல்படும், பெரும்பான்மை மக்களைக் கொச்சைப்படுத்தும் இந்த பத்திரிகைகளை மானமுள்ள தமிழர்கள் இன்னும் வாங்கிப் படிப்பது எத்தனை பெரிய அறிவீனம்!
இதோ சில உண்மைகள்: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிபுரிந்து கொடும் நோய்களுக்கு ஆளாகி வெளியேறியவர்கள் மட்டும் 128 பேர்.

    மிகக் கொடிய எலும்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை 19. இவர்களில் 9 பேர் மரணத்தை மட்டுமே அணுமின் நிலையம் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டது. மீதி பத்துபேர் வேலையிலிருந்து நின்ற பின் இறந்துவிட்டதாகக் கூறி மறைத்துவிட்டது. வேலையிலிருந்து அவர்கள் நின்றதே கதிர்வீச்சு பாதிப்பினால்தான் என்பது மறைக்கப்பட்டுவிட்டது.

    கல்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் 10ல் இருவருக்கு தைராய்ட், தசை நோய்கள், எலும்பு நோய்கள், முடக்குவாதம், புற்றுநோய்குறிப்பாக தொண்டைப் புற்றுநோய்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதி மக்களின் மிகப் பெரிய பிரச்சினை மலட்டுத் தன்மை. ஆண் அல்லது பெண் யாராவது ஒருவருக்கு உயிரணுக்கள் உற்பத்தியாகாத அவலத்தை இந்த நாசகார அணு உலைகள் ஏற்படுத்தியுள்ளன.

பாதிப்பு 2
   சென்னை பொது மருத்துவமனையில் Bone Marrow Cancer -க்கான case studies பெரும்பாலும் கல்பாக்கம் பகுதி மக்கள்தான்.

   இந்தக் கல்பாக்கம் அணு உலையின் அணுக்கதிர் வீச்சு அளவை அறிய ஆண்டுதோறும் நடக்கும் ஒத்திகை நிகழ்ச்சியில் தவறாமல் பங்கெடுத்து வருகிறேன். இந்த ஒத்திகையை மேற்கொள்ள கிராமப் பகுதிகளுக்குச் செல்லும்போது, அந்த மக்கள் விடும் சாப மொழிகளை, அணுஉலை ஆதரவாளர்கள் தயவுசெய்து கேட்க வேண்டும்!

    வழக்கமாக வெளியாகும் அளவைவிட நான்கு மடங்கு (அதாவது 400 சதவீதம்) அதிகமான அணுக்கதிர் வீச்சு கல்பாக்கத்தின் மிக அருகாமைப் பகுதியான திருக்கழுக்குன்றத்திலும், சதுரங்கப்பட்டினத்திலும் உள்ளது.
வழக்கமாக கதிர்வீச்சு ஒத்திகை நிகழ்ச்சி முடிந்ததுமே மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் எஸ்பி இணைந்து ஒரு பிரஸ் மீட் வைப்பார்கள். அதில், “எல்லாம் நார்மலா இருக்கு. எந்த நெருக்கடி வந்தாலும் சமாளிக்கும் அளவு படைகள் தயாரா இருக்கு. இதைமட்டும் போடுங்க. சும்மா நீங்க பாத்ததையெல்லாம் எழுதி மக்களை பயமுறுத்த வேணாம்,!” என்பதை அழுத்தமாகச் சொல்லி அனுப்புவார்கள்.

    அதனால் அடுத்த நாள் பெரிய பத்திரிகைகள் அனைத்திலுமே அணுக்கதிர் வீச்சு ஒத்திகையில் போலீசார் செய்த ஆக்ஷன் ஸ்டன்ட்களை மட்டும் பிரதானப்படுத்தி செய்தி வெளியிடும் பத்திரிகைகள், அந்தப் பகுதியில் முகம் வீங்கி, கால் இழுத்துக் கொண்டு, கழுத்தில் தொங்கும் கட்டிகளுடன் திரியும் பயமுகங்களைப் பதிவு செய்யாமலே போய்விடுகிறார்கள்!

    இப்போதும் கூட இந்த விவரங்கள் எதையுமே தெரிந்து கொள்ள மறுக்கும் மூர்க்கமும் மூடத்தனமும்தான் அணுஉலை ஆதரவாளர்கள் மத்தியில் பார்க்க முடிகிறது. குறிப்பாக அணு உலைக்கான ஆதரவு என்பதைவிட, ‘ஜெயலலிதா சொல்லிவிட்டார், இனி போராட்டக்காரர்களை அடித்து நொறுக்கி தூக்கி வீசுங்கள்என்ற கண்மூடித்தனத்தை மட்டுமே இவர்களிடம் பார்க்க முடிகிறது.

சேர்த்து வைத்திருக்கும் இந்த அணுக் கழிவுதான் கடைசி சொத்தா?!
    மெத்தப்படித்த இந்த சுயநல கும்பலின் அவா, சக மனிதனை அவித்துத் திண்ணுவதுதானா.. எத்தனை கேவலம்!
நாம் இருக்கும்வரை எல்லாவற்றையும் அழித்து அனுபவித்து ஜாலியாக இருப்போம். பத்துவருடம் கழித்து எவனுக்கு என்ன வந்தால் என்னநம்மாளுங்கசௌக்யமாஇருந்தா போதும்எவன் வீட்டில் இழவு விழுந்தாலும், என் வீட்டில் கரண்ட் இருந்தா போதும்.’ என்ற வக்கிரப்புத்திக்காரர்களும் அவர்களின் நச்சுப் பிரச்சாரமுமே ஜெயலலிதா போன்றவர்களின் ஆணித்தரமான நம்பிக்கை.

    கல்பாக்கத்திலோ கூடங்குளத்திலோ என்ன நடந்தாலும், நமக்கென்ன ஆகிவிடப் போகிறதுநாம் பாதுகாப்பாகத்தானே இருக்கிறோம், என்ற அலட்சியமே இவர்களை இப்படியெல்லாம் பேச வைக்கிறது. அணுஉலைகளை ஆதரிப்பவர்கள் அனைவருக்கும் கூடங்குளத்திலோ, கல்பாக்கத்திலோ உத்தியோகம் கொடுத்து, ரொம்ப இல்லை ஜஸ்ட் மூன்றாண்டு காலம் இருந்து பார்க்கச் சொல்ல வேண்டும். குறிப்பாக திருமணமாகாத அல்லது திருமணமாகி குழந்தைப் பெறாதவர்களை. அன்றைக்குதான் இவர்களால் அணு உலைகளின் பாதிப்பைப் புரிந்து கொள்ள முடியும்!

-டாக்டர் எஸ் ஷங்கர் envazhi.com