Saturday 15 September 2012

கூடங்குளம்: அச்சுதானந்தன் அவர்களின் கட்டூரை

கேரள மாநிலத்தைச் சேர்ந்த வி.எஸ். அச்சுதானந்தன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைவர்களில் முக்கியமானவர். கட்சியின் கொள்கை நிலைபாட்டுக்கு எதிராகக் கூடன்குளம் மக்களுக்கு ஆதரவாக எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை, இந்தியச் சூழலில் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
  

பின்வருவன கட்டூரையின் தொகுப்பு


 கேரளத்தின் எல்லையிலிருந்து 26 கிலோ மீட்டரும், நமது தலைநகரத்திலிருந்து வெறும் 79 வான்வெளித் தூரத்தில் கூடன்குளத்தில் ஒரு அணுமின் நிலையம் செயல்படப்போகிறது.

நமது மின் உற்பத்திதுறைக்கு அணுமின் நிலையம் அவசியமா? அணுமின் நிலையங்களின் செயல்பாடு சுற்றுபுறவாசிகளுக்கும் சுற்றுபுற சூழலுக்கும் பாதிப்பை உண்டு பண்ணுமா?
கூடன்குளத்திற்கு அணுமின் நிலையம் பொருத்தமானதா?
அங்கு கட்டப்படும் மின் நிலையம் பாதுகாப்பனதா?

இவற்றையெல்லாம் பரிசீலினை செய்யவேண்டியது முக்கியமான அவசியமாகி இருக்கிறது.

உலகம் முழுவதும் அணுசக்திக்கு மாறும்போது, இந்தியா மட்டும் ஒதுங்கி இருக்க முடியுமா? என்கிற வாதம் யாதார்த்த நிலைக்கு எதிரானது.

இன்று உலகத்திலுள்ள 205 நாடுகளில் 31 நாடுகள் மட்டும்தான், மின் தேவைக்காக அணுமின் நிலையங்களை சார்ந்துள்ளது.

உலகத்தின் யூரேன்யம் உற்பத்தியில் 23 சதவீதம் ஆஸ்திரேலியாவில் உள்ளது. ஆனால், அங்கு இதுவரை அணுமின் நிலையங்கள் தொடங்கப்படவில்லை.

உலகத்தின் மின்தேவையில் வெறும் 7 சதவீதம் மட்டுமே அணுசக்தி வழியாக உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், "அணுமின் நிலையங்களை தவிர்க்க முடியாது" என்கிற வாதம் அடிப்படையற்றது. "மிகவும் சிக்கனமான மின் உற்பத்திகான வழிமுறைதான் அணுமின் நிலையங்கள்" என்பதும் சரியல்ல.

"விபத்திற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமுள்ளதும், அதிகப்படியான கட்டுமான செலவுகளை ஏற்படுத்துவதுமான அணுமின் நிலையங்களுக்கு கடன் அளிப்பதில்லை" என்று, 2007-ல் அமெரிக்காவின் முக்கியமான ஆறு வங்கிகள் அமெரிக்காவின் எரிசக்தித் துறைக்கு தெரிவித்துள்ளன.

"இது மிகவும் லாபகரமான மின் உற்பத்திக்கான அடிப்படை" என்பது பன்னாட்டு அணு நிறுவனங்களுக்கு உதவிபுரிவதற்காக சொல்லப்படும் ஒரு பொய் பிரசாரமாகும்.

கர்நாடக மாநிலம் கைகாவில், 230 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு ரியாக்டர்கள் செயல்படுகிறது. இவை ஒவ்வொன்றிருக்கும் அரசு அளித்த ஹெவி வாட்டர் மானியம் மட்டும் 1,450 கோடி ரூபாய்.
என்றாலும் மின்கட்டணம் யூனிட்டிற்கு 2.90 ரூபாயாக உள்ளது.

எந்தவொரு திட்டத்திற்கும், 'அதை தொடங்கும்போதுள்ள கட்டுமான செலவு, அவசியமான எரிபொருள், அதன் விலை, செயல்படும்போது ஜீவராசிகளுக்கும் சுற்றுப்புற சூழலுக்கும் ஏற்படும் பிரச்சனைகள், விபத்திற்கான சாத்தியங்கள், விபத்து நிவாரணம், கழிவு மேலாண்மை' என்பவற்றை கணக்கிலெடுக்க வேண்டும்.

இவை ஒவ்வொன்றையும் பரிசீலித்தால், ஒன்றில்கூட அணுமின் நிலையங்களுக்கு பாஸ் மார்க் கொடுக்க முடியாது.

அணுமின் நிலையத்தின் செயல்பாட்டிலிருந்து உண்டாகும் அணு கழிவுகள், மற்ற கழிவுகளைப்போல அல்ல. அவற்றை அழிக்க ஆக்கப்பூர்வமான முறைகள் எதுவும் நடைமுறையில் இல்லை.

அமெரிக்காவிலும் பிரான்சிலும் மின் உற்பத்தி செய்து முடிந்த பல அணுமின் நிலையங்கள், இன்றுவரி குளிர்விப்பதற்காக வேண்டி செயல்பட்டு வருகிறது. இது, இந்த கழிவுகளை என்ன செய்ய வேண்டும் என்று தெரியாததினால் ஆகும்.

அணுமின் நிலையம் செயல்படும் இடங்களில் எல்லாம் இரத்த சோகை, தைராய்டு கேன்சர் முதலிய கடுமையான நோய்கள் படர்ந்து பரவுதாக பல்வேறு ஆய்வுகள் தெளிவாக்குகிறது.

இந்த ஆய்வுகளை தாமதப்படுத்தும் முயற்சிகள், அணுமின் நிலைய அதிகாரிகளின் பக்கமிருந்து செய்யப்படுகிறது.

பன்னாட்டு அணு சக்தி நிறுவனம், உலக சுகாதார நிறுவனங்களுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி, 'ஐ.ஏ.இ.ஏ' -இன் அனுமதியின்றி, அணுகதிர் வீச்சு ஏற்படுத்தும் சுகாதாரப் பிரச்சனைகள் பற்றிய தகவல்களை வெளியிடக்கூடாது.

இப்படி ஒரு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதன் பின்னால் உள்ள நோக்கம் என்ன?

புக்கஷிமா அணுவிபத்திற்கு பிறகு, பன்னாட்டு கார்பரேட் ஊடகங்கள் வெளிபடுத்தும் மௌனமும் இத்துடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டும்.

மூன்றாம் உலக நாடுகளையும் கார்பரேட் ஊடகங்களையும் உலக சுகாதார நிறுவனங்களையும் இந்த அணு நிறுவனங்கள் விலைக்கு வாங்கியுள்ளது என்கிற குற்றசாட்டு உறுதியானது.

இந்த மௌனத்தை சான்றிதழாக மாற்றுகின்ற, சில மக்கள் விரோத விஞ்ஞானிகளும் உடன் சேருகின்ற பேரபாயங்கள், மீண்டும் நிகழ்த்தப் படுகிறது.
அணுமின் நிலையங்கள் செயல்பட மிக அதிகமான தண்ணீர் அவசியம். கூடன்குளத்தின் 1000 மெகாவாட் ரியாக்டருக்கு, தினமும் 51 இலட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. ஆறு ரியாக்டர்கள் செயல்படத் தொடங்கினால், தினமும் 2.02 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.

இவ்வளவு அதிகமான தண்ணீரை மிகவும் சக்தியாக உறிஞ்சும்போது, கடலில் மீன் உட்பட எல்லா ஜீவராசிகளும் இல்லாமல் போகும். மீன்கள் அணு உலைக்குள் செல்லாமல் இருக்க அரிப்புகள் வைக்கப்பட்டுள்ளதாக வாதம் செய்கின்றனர். ஆனால், இதுபோன்ற அரிப்புகளில் வேகமாக மோதும் பெரிய மீன்கள்கூட செத்துபோகின்றன என்பது தான் இதுவரையுள்ள அனுபவங்கள் உணர்த்துகிறது.

அணுமின் நிலையத்தின் பயன்பாட்டிற்கு பிறகு, அணு கழிவுகளை உட்கொண்ட வெப்ப நீர், அன்றாடம் கடலில் திறந்துவிடப்படுகிறது. இதனால், 140 டிகிரிக்கு சமீபமுள்ள கடலின் வெப்பநிலை, கிட்டதட்ட 13 டிகிரி அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தொரிவிக்கின்றன.

இது கடலின் உயிர் சுழற்சியை பாழாக்குகிறது. பின்பு மீன் பிடிப்புத் தொழிலை காலப்போக்கில் இல்லாமலாக்குகிறது.

"அணுமின் நிலையங்களில் உபயோகிக்கப்படும் எரிபொளை மறுசுழற்சி முறையில் உபயோகிப்பதால், அணு கழிவுகள் குறைவாகவே வரும்" என்பது கண்களை மூடிக்கொண்டு இருட்டு என்பதற்கு ஒப்பாகும்.

மறுசுழற்சி செய்வது வெறும் 1 மட்டுமே. 1000 மெகாவாட்ட திறனுள்ள ஒரு அணுமின் நிலையம், ஒரு வருடம் குறைந்தது 30 டன் அணு கழிவுவை வெளியேற்றும். கேன்சரும் மரபு ரீதியான பிறவிக் குறைபாடுகளையும் ஏற்படுத்தும். இந்த, தீய பூதத்தைதான் கடலில் தள்ளுகின்றனர்.

அணுமின் நிலையங்களின் விபத்திற்கான வாய்ப்பு மிகவும் அதிகம். கையாள்பவரின் கவனக்குறைவு, இயந்திர கோளாறு, இயற்கை சீற்றம் முதலியவற்றால், முக்கியமான விபத்துகள் ஏற்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில், தாக்குதல் அபாயங்களையும் கணக்கிலெடுக்க வேண்டும்.

பிற விபத்துகள் வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்வு என்றால், அணுமின் நிலைய விபத்துகள் ஒரு தொடர்ச்சியாகும். அதை நமது, வரப்போகும் தலைமுறைகளும் அனுபவிக்க வேண்டி இருக்கும்.

1986-ல், ஏப்ரல் 26 அன்று செர்நோபில் அணு விபத்து ஏற்படும்போது 1986 முதல் 2004 வரை 9,85,000- மரணங்கள், இதன் காரணமாக உண்டானதாக புள்ளிவிபரங்கள் தொரிவிக்கின்றன.
அணுக் கழிவினால் மனிதனுக்கும், பிராணிகளுக்கும், ஜீவராசிகளுக்கும் நோய் அணுக்களுக்கும் ஜீன்களில் மாற்றத்தை ஏற்படுத்தியது ஒரு பரிதாபமான விஷயம்.

செர்னேபில் மற்றும் அதற்கு முன் ஏற்பட்ட அயர்லாந்து உள்ள திரீமைல் விபத்தினுடைய பாடத்தை கற்று, அதன் பிறகு கட்டப்படும் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானது என்பது, பின்புள்ள பிரச்சாரம்.

ஆனால், 2011- மார்ச் 11 அன்று உலகத்தை நடுங்க வைத்துகொண்டு ஜப்பானில் புகுஷிமாவில் விபத்து ஏற்பட்டது. பூகம்பமும் சுனாமியும் சேர்த்து, அங்குள்ள 3 ரியாக்டருகளும் உபயோகித்த அணுக் கழிவை பாதுகாத்து வைத்திருந்த 4 தொட்டிகளும் விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தின் ஆழத்தை, இனிதான் உலகம் அறியப்போகிறது.

காற்று கடலை நோக்கி வீசியதால், 80 அணு பொருட்களும் பசிபிக் கடலில் கலந்ததன் காரணமாக, ஜப்பான் என்கிற நாட்டின் மிச்சமீதி இன்று இருக்கிறது. ஆனால், அணு உலையை குளிரூட்ட உபயோகித்த கடல் நீரில், 12,000 டன் நீர் புக்கஷிமா நிலையத்தின் அஸ்திவாரத்தில் தேங்கி நிற்கிறது.

இதில் 6 சதவீதம், புளூட்டேனியம் அடங்கிய மோக்ஸ் எனப்படும் அணு பொருட்களாகும். இது, ஹிரோஷிமாவில் விழுந்த அணு குண்டு விபத்தைவிட, பத்து மடங்கு அபாயமானதாகும். தேங்கி நிற்கும் இந்நீர், கடலில் கலக்கும்போதுதான் இதன் முழுமையான அபாயம் தெரிய வரும். அதை, வரும் தலைமுறைகளும் அனுபவிக்க வேண்டியது வரும்.

மே மாதம் 2012-ல், ஜப்பான் தனது 54 அணுமின் நிலையங்களையும், ஜெர்மனி தனது 17 அணுமின் நிலையங்களையும் இழுத்து மூடி விட்டது. இத்தாலி அணுமின் நிலையங்களே வேண்டாம் என்று வைத்து விட்டது.

விபத்துகளிலிருந்து மேற்கண்ட நாடுகள் பாடம் படித்தபோது, இந்தியா அதை நோக்கி நகருகிறது.

அமெரிக்காவின் நலன்களுக்கு அடிபணிந்து, அணு ஆயுத ஒப்பந்ததில் கையெழுத்திட்ட மன்மோகன்சிங் அரசு, புகுஷிமாவுக்கு பிறகும் கூடன்குளம் திட்டத்தை முன் நடத்துகிறது.

இந்த திட்டத்தில் விபத்து நேரிட்டால், தமிழகத்தின் தென்பாகம், கர்நாடகாவின் தென்பாகம், கேரளமும் இலங்ககையும் கிட்டத்தட்ட பூரணமாக அபாகரமான எல்லைக்குள் வரும்.

அதனால்தான், கூடன்குளம் என்கிற இடம் இந்த திட்டத்திற்கு எவ்வளவு தூரம் பொருத்தம் என்பதை பாரிசீலனைச் செய்ய வேண்டியது, நம்மை பொறுத்த வரை தவிர்க்க முடியாததாகிறது.

"புக்கஷிமாவில் ஏற்பட்டது பூகம்பம் மற்றும் சுனாமியால் ஏற்பட்டதாகும். அல்லாமல், தொழில் நுட்பக் கோளாரால் ஏற்பட்டதல்ல" என்று அணுமின் நிலையங்களை ஆதரிப்பவர்கள் வாதம் செய்கின்றனர்.

உண்மையில், பூகம்பம் உண்டானதால் ஏற்பட்ட மின்சார பிரச்சனைதான்(மின்சாரம் இல்லாததால் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை) இந்தப் பேரழிவிற்கான தொடக்கம். கூடன்குளத்தில் மின்சார பிரச்சனை ஏற்பட, பூகம்தான் உண்டாக வேண்டுமென்பதில்லை.

இந்திய அரசு வெளியீடும் ‘வனரபிலிட்டி அட்லஸ்’ -ன்படி, கூடன்குளம் பிரதேசம்-3 பூகம்பத்திற்கான சாத்தியமுள்ள பகுதி. அபூவர்மான எரிமலைகள் உள்ள இடமாகும்.

கூடன்குளத்திலிருந்து 130 கிலோ மீட்டர் தூரத்தில், மன்னார் கடலில் பாதுகாப்பற்ற நிலையில் எரிமலைகள் உள்ளது. கூடன்குளம் அணுமின் நிலையத்தின் 25 கிலோ மீட்டர் சுற்றளவில், 1998-லும் 2008-லும் பூமிக்கடியில் பாறைகள் உருகி வடியும் சம்பவங்கள் நடந்துள்ளது.

2004-ல் சுனாமியால் சின்னபின்னமாகப்பட்ட கன்னியாகுமாரி குளச்சல் பகுதிகளுக்கு அருகே தான் கூடன்குளம் உள்ளது. 1986-ல் அணு சக்தித்துறை வெளியிட்ட அறிக்கை, "இந்திய கடலோரங்களில் சுனாமிக்கான சாத்தியகூறுகள் இல்லாததினால், புயலை மட்டும் கணக்கில் கொண்டால் போதும்" என்கிறது.

2001-ல் கூடன்குளம் அணுமின் நிலைய கட்டுமானங்கள் தொடங்கியது. எனவே, 2004-ல் சுனாமி தாக்குதலை கணக்கிலெடுத்து, அரசு தன்னுடைய திட்டத்தை மாற்றியிருக்க வேண்டும்.

ஆனால், "சுனாமி தாக்குதலை கவனத்தில் எடுத்திருந்ததும், அணுமின் நிலையம் பாதுகாப்பானதுதான்" என்று இப்போது மத்திய அரசு சொல்கிறது சொல்கிறது.


"இந்திய அரசு கடமைப்பட்டுள்ளது மக்களுக்கல்ல! அணு ஆயுத நிறுவனங்களுக்குத்தான்" என்பதற்கு இதைவிடப் பெரிய சான்று எதுவும் தேவையா?

கடந்த மூன்று வருடங்களில், அணுமின் நிலையத்தின் 25 கிலோ மீட்டர் சுற்றளவில் , மூன்று இடங்களில் மழைநீர் பூமியை பிளந்து கிணறு வடிவத்தில் பூமிக்கடியில் போன நிகழ்வும் நடந்துள்ளது.

சுருக்கமாக, கூடன்குளம் பிரதேசம் எந்த காரணத்தை கொண்டும் அணுமின் நிலையத்திற்கு பொருத்தாமனதல்ல.

இங்குதான் 600 மெகாவாட் சக்தியுள்ள ஆறு ரியாக்டர்கள் தொடங்க உத்தேசித்துள்ளனர். 2001-ல் கட்டத் தொடங்கிய இரண்டு ரியாக்டர்களும், அணு ஆயுத ஒப்பந்ததிற்கு பிறகு புதிதாக சேர்க்கப்பட்ட நான்கு ரியாக்டர்களும் இதில் அடங்கும்.

இப்போது கட்டுமானம் முடிந்த அணுமின் நிலையங்கள் சுற்றுபுறசூழல் ஆய்வு எதுவும் மேற்கொள்ளாமல் கட்டபட்டவையாகும். ஜெய்தாபூரில் இப்படி ஒரு சுற்றுப்புற சூழல் ஆய்வை, இந்த நிறுவனம் மேற்கொண்டிருந்தது. இதற்கு எதிராக இடதுசாரி கட்சிகள் பிரதமருக்கு புகார் அளித்திருந்தனர்.

'அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால் அதன் பொறுப்பு நிலையத்தை நடத்தும் என்.பி.சி.எல் -லுக்குத்தான் என்று சொன்ன பிரதம மந்திரி, ஒப்பந்ததில் கையெழுத்திட்ட பிறகு விபத்து உண்டானால் யார் பொறுப்பு?' என்பதில் சந்தேகத்தை கிளப்புகிறார்.

அணுமின் நிலையங்களை ஆதரித்தவர்களுக்கெல்லாம் இதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சலுகைகளை வழங்கிய அணு சக்தி ஒப்பந்ததில், பதினேழாம் பிரிவு "முழு உத்திரவாதமும் அணுமின் நிலையத்தின் இந்திய ஏஜென்சிகளுக்குத்தான்" என்று வரையெறுக்கப்பட்டுள்ளளது.

கூடன்குளத்தில் உபயோகிக்கப்படும் 'வி.வி.இ.ஆர்-100' என்கிற மாடலில், நிலையத்தில் பல தொழில் நுட்ப குறைபாடுகளும் உள்ளதாக அறிக்கையில் உள்ளது.

ஆனால், கூடன்குளத்திலுள்ள அணுமின் நிலையத்தின் பிரச்சனை இதிலும் அபூர்வமானது. முக்கியமான பாகங்களில் வெல்டிங் செய்யக்கூடாது என்பது ஒப்பந்ததின் முக்கிய ஷரத்து. ஆனால், 6 வெல்டிங்கள் உள்ள ரியாக்டர்கள் செயல்படப்போகிறது.

கூடன்குளத்தின் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று யார் சொன்னாலும், கண்முன்னால் பார்த்த பேரழிவுகளை இந்த தலைமுறைக்கு மறக்க முடியாது.

பாதுகாப்பு விஷயங்களில் இப்போதுள்ள பொறுப்பின்மையை இந்த அணு நிறுவனங்கள் தொடர்ந்தால், செர்நோபிலும் புக்கஷிமாவும் இங்கே நடக்குமென்று சி.ஏ.ஜ. தனது செயல்பாட்டு தணிக்கையில் முன் அறிவிப்பைச் கொடுத்திருக்கிறது.

அதனால், இந்த அணு ஆயுத வெடிகுண்டு நமக்கு வேண்டாம். நிலைத்திற்கான செயல்பாடுகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். கேரளமும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டிய இந்த பெரும் அபாயத்தை புரிந்துகொண்டு, கேரள அரசும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

அணு பிரதேசங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்து எரிபொருளை நிரப்பி, திட்டத்தை தொடர்ந்து முன்னேற்றும் எண்ணத்தை மத்திய அரசு கைவிடவேண்டும்.

ஜப்பான் போன்ற தொழில்நுட்பத்தில் முன்னணியில் நிற்கும் நாடுகள்கூட, விபத்து நேர்ந்த பிறகு 54 அணுமின் நிலையங்களை அடைத்து பூட்டி விட்டது.

மற்றவர்களின் தவறில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அணுமின் நிலையங்களுக்கு கொடுக்கும் மானியத்தை சூரியசக்தி மின்சாரத்திற்கு கொடுத்திருந்தால், அது நாட்டின் மின் பற்றாக்குறைக்கு தீர்வு காண போதுமானதாக இருந்திருக்கும்.