Sunday, 25 March 2012

சேர்த்து வைத்திருக்கும் இந்த அணுக் கழிவுதான் கடைசி சொத்தா?!


    அரசு தம்வசம் வந்த பின்பும் அரசியல்வாதிகளின் நரித்தனம் மாறுவதே இல்லை. அதனால்தான் மக்களின் காவலனாக இருக்க வேண்டியவர்கள், மக்கள் அசந்த நேரமாகப் பார்த்து வஞ்சகத்தை அரங்கேற்றுகிறார்கள். மக்களை தமது விரோதிகளாக பாவித்து அதிகாரத்தை செலுத்தும் இவர்களின் ஒரே நம்பிக்கை நமக்கு ஒரு நாளும்ஜட்ஜ்மென்ட் டேஇல்லை என்ற நம்பிக்கைதான்.

    கூடங்குளத்தால் எந்த ஆபத்தும் இல்லை, தாராளமாக உடனே திறக்கலாம், அந்தப் பகுதி மக்களுக்கு ரூ 500 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கலாம் என்றெல்லாம் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததைக் கேட்டதும் இப்படித்தான் எழுதத் தோன்றியது.

    எந்த ஆபத்தும் இல்லாத ஒரு திட்டம் என்றால், அப்புறம் எதற்கு ரூ 500 கோடி ஒதுக்கீடு? கூடங்குளம் சுற்றுவட்டாரத்தின் நீண்ட கால கருமாதி செலவுக்கா? நல்ல திட்டம் என்றால் அந்தப் பகுதி தானாகவே வளர்ந்துவிடுமேஉள்கட்டமைப்பு வசதிகள் இயல்பாகவே கிடைக்குமே. தங்கள் வழக்கப்படி ரூ 500 கோடி லஞ்சம் தருகிறார்கள், ஒரு பெரும் ஆபத்தைத் தலையில் கட்ட!
இரண்டு மாதங்களுக்கு முன் மக்களுக்கு விரோதமான ஒரு திட்டமாக ஜெயலலிதாவுக்குத் தெரிந்த கூடங்குளம், இன்றைக்கு அற்புதமான திட்டமாக மாறியிருப்பதன் பின்னணி நிபுணர் குழு அறிக்கையா, டெல்லியில் படிந்த பேரமா? புரியவில்லை.

    கூடங்குளம், ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளை இன்று நேரில் பார்த்து செய்தி சேகரிக்கப் போன நமது நிருபர், “சார், ஏதோ பெரிய யுத்தம் நடப்பதற்கான ஏற்பாடுகள் மாதிரி இருக்கு. உண்ணாவிரதத்துக்கு ஆதரவா வந்த அத்தனை பேரையும் கைது பண்ணிட்டாங்க. லூர்து மாதா சர்ச்சுக்குள் உண்ணாவிரதம் இருப்பவர்களை மட்டும் எதுவும் பண்ண முடியல. அதனால, பலவந்தமா உள்ளே புகுந்து குண்டர் சட்டம் மாதிரி ஏதோ ஒரு பிரிவில் கைது பண்ண ஆணையோடு காத்திருக்காங்க. பஸ் போக்குவரத்தை இரண்டு நாட்களாக அடியோடு நிறுத்திவிட்டார்கள். மக்கள் நடமாட்டம் என்பதே இல்லை. சாலையில் பொதுமக்கள் நடக்கக் கூட அனுமதி இல்லை. நாம இருப்பது தமிழ்நாடுதானான்னு சந்தேகமா இருக்கு,” என்றார்.

    இன்னொரு முக்கிய விஷயம், ‘இங்கு பத்திரிகையாளர்கள் யாரும் இருக்கக் கூடாது. மீறி இருந்தா உங்க உயிருக்கு நாங்க பொறுப்பேற்க முடியாதுஎன்று மிரட்டி வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள் போலீசார்.
மக்களுக்கு எந்த அளவு பகையாளியாக மாறி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன மத்திய மாநில அரசுகள் என்பதற்கு இந்த நிலை ஒரு சாட்சி. ஜெயலலிதா உண்மையிலேயே துணிச்சலும் இம்மியளவுக்காவது நேர்மையும் மிக்க ஆட்சியாளராக இருந்திருந்தால், இந்த முடிவை வெள்ளி அல்லது சனிக்கிழமை எடுத்திருக்கலாம். சங்கரன்கோயில் தேர்தலுக்காக காத்திருந்து, தேர்தல் முடிந்த அடுத்த நாளே தன் வேலையைக் காட்டுகிறார்.

    எந்த மக்கள் ஜெயா தங்கள் காவல் அரணாக நிற்பார் என நம்பினார்களோ, அந்த மக்களையே அடித்து நொறுக்கி, அரசின் முடிவை தலையில் திணிக்கும் வஞ்சகத்துடன் இத்தனை நாளும் அமைதி காத்திருக்கிறார் ஜெயலலிதா என்ற விமர்சனத்தில் இம்மியளவும் மிகையில்லை!

    கைநீட்டி ஓரிடத்தில் கமிஷன் பெற்றுவிட்டால், தங்களுக்கு அளிக்கப்பட்ட வேலை எத்தனை மாபாதகமாக இருந்தாலும் அதை நிறைவேற்ற ஏஜென்டுகள் படாத பாடுபடுவார்கள். மன்மோகன் சிங் அரசை அந்த கமிஷன் ஏஜென்டாகத்தான் இன்று உலக நாடுகள் பார்க்கின்றன.

    அப்துல் கலாமை நல்ல மனிதர் என்று நம்பிக்கொண்டிருந்த படித்த சமூகத்துக்கு, அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. காரணம் இந்த கமிஷன் ஏஜென்டுகளின் அறிவிக்கப்படாத தூதுவராய் அவர் வந்ததுதான். உதயகுமாருக்கு அணுஉலை பற்றி ஒன்றுமே தெரி்யாது என்பவர்களுக்கு, அணு உலை விஷயத்தில் அப்துல்கலாமின் ஞானமும் உதயகுமார் அளவுக்குதான் என்பது புரியாமல் போனதை என்னவென்பது?
அணு உலையின் பாதிப்பு குறித்து, அதை முழுமையாக அறிந்த விஞ்ஞானிகளின் அசைக்க முடியாத விளக்கங்கள், ஆய்வு முடிவுகளை உதயகுமார் தலைமையிலான போராட்டக்குழு முன்வைத்துள்ளது. அதற்கு இதுவரை மத்திய அரசும், உலையை உருவாக்கிய ரஷ்ய அரசும் ஒரு சின்ன மறுப்பு கூட தரவில்லை. அவர்களால் ஒரு போதும் தர முடியாது.

    இந்த அணுஉலைக்காக பேச்சிப்பாறை அணை நீரைத்தான் உறிஞ்சப்போகிறார்கள். ஏற்கெனவே தண்ணீர்ப் பஞ்சத்தில் அடிபட்டுக்கிடக்கும் தமிழக விவசாயியின் வயிற்றிலடிக்கும் செயல் இது.

    அணு உலைகள் விஷயத்தில் உலக நாடுகள் கையைச் சுட்டுக் கொண்டு, மீண்டும் தங்கள் பழைய முறை மின் உற்பத்திக்குத் திரும்ப, இந்தியா மட்டும் மாநிலத்துக்கு நான்கு மெகா அணு சுடுகாடுகளை உருவாக்குவதே முதல் வேலை என்று முடிவெடுத்திருப்பது இந்தியர்களின் சாபக்கேடு.

    திரும்பத் திரும்ப இந்த அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தைக் குறைசொல்லும் பேர்வழிகள் ஒன்றைப் புரிந்து கொள்ளவில்லை அல்லது தெரிந்து கொள்ளவில்லை அல்லது எல்லாம் தெரிந்தும் நாடகமாடுகிறார்கள் (அது அவர்களின் பிறவிக் குணமாகவும் இருக்கலாம்!)

பாதிப்பு-1
    கூடங்குளம் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இந்த போராட்டம் நடக்கிறது. அன்று உதயகுமாரோ இப்போதுள்ள வேறெவருமோ இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் எதிர்ப்பு மிகக் கடுமையாக இருந்தது. அதன் விளைவு, கூடங்குளம் கட்டுமானப் பணி திட்ட தொடக்க விழாவை அறிவித்து பின் ரத்து செய்தது மத்திய அரசு.
கல்பாக்கம் அணு மின் நிலையத்தால் ஒரு பாதிப்பும் இல்லை. எல்லோரும் சுகவாசிகளாக இருப்பதாக சிலர் பொய்யை அவிழ்த்துவிடுகின்றனர். அதற்கு துணைபோகின்றன ஒரு சில ஈனத்தனமான பத்திரிகைகளும். குறிப்பிட்ட இனத்துக்காக மட்டுமே செயல்படும், பெரும்பான்மை மக்களைக் கொச்சைப்படுத்தும் இந்த பத்திரிகைகளை மானமுள்ள தமிழர்கள் இன்னும் வாங்கிப் படிப்பது எத்தனை பெரிய அறிவீனம்!
இதோ சில உண்மைகள்: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிபுரிந்து கொடும் நோய்களுக்கு ஆளாகி வெளியேறியவர்கள் மட்டும் 128 பேர்.

    மிகக் கொடிய எலும்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை 19. இவர்களில் 9 பேர் மரணத்தை மட்டுமே அணுமின் நிலையம் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டது. மீதி பத்துபேர் வேலையிலிருந்து நின்ற பின் இறந்துவிட்டதாகக் கூறி மறைத்துவிட்டது. வேலையிலிருந்து அவர்கள் நின்றதே கதிர்வீச்சு பாதிப்பினால்தான் என்பது மறைக்கப்பட்டுவிட்டது.

    கல்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் 10ல் இருவருக்கு தைராய்ட், தசை நோய்கள், எலும்பு நோய்கள், முடக்குவாதம், புற்றுநோய்குறிப்பாக தொண்டைப் புற்றுநோய்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதி மக்களின் மிகப் பெரிய பிரச்சினை மலட்டுத் தன்மை. ஆண் அல்லது பெண் யாராவது ஒருவருக்கு உயிரணுக்கள் உற்பத்தியாகாத அவலத்தை இந்த நாசகார அணு உலைகள் ஏற்படுத்தியுள்ளன.

பாதிப்பு 2
   சென்னை பொது மருத்துவமனையில் Bone Marrow Cancer -க்கான case studies பெரும்பாலும் கல்பாக்கம் பகுதி மக்கள்தான்.

   இந்தக் கல்பாக்கம் அணு உலையின் அணுக்கதிர் வீச்சு அளவை அறிய ஆண்டுதோறும் நடக்கும் ஒத்திகை நிகழ்ச்சியில் தவறாமல் பங்கெடுத்து வருகிறேன். இந்த ஒத்திகையை மேற்கொள்ள கிராமப் பகுதிகளுக்குச் செல்லும்போது, அந்த மக்கள் விடும் சாப மொழிகளை, அணுஉலை ஆதரவாளர்கள் தயவுசெய்து கேட்க வேண்டும்!

    வழக்கமாக வெளியாகும் அளவைவிட நான்கு மடங்கு (அதாவது 400 சதவீதம்) அதிகமான அணுக்கதிர் வீச்சு கல்பாக்கத்தின் மிக அருகாமைப் பகுதியான திருக்கழுக்குன்றத்திலும், சதுரங்கப்பட்டினத்திலும் உள்ளது.
வழக்கமாக கதிர்வீச்சு ஒத்திகை நிகழ்ச்சி முடிந்ததுமே மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் எஸ்பி இணைந்து ஒரு பிரஸ் மீட் வைப்பார்கள். அதில், “எல்லாம் நார்மலா இருக்கு. எந்த நெருக்கடி வந்தாலும் சமாளிக்கும் அளவு படைகள் தயாரா இருக்கு. இதைமட்டும் போடுங்க. சும்மா நீங்க பாத்ததையெல்லாம் எழுதி மக்களை பயமுறுத்த வேணாம்,!” என்பதை அழுத்தமாகச் சொல்லி அனுப்புவார்கள்.

    அதனால் அடுத்த நாள் பெரிய பத்திரிகைகள் அனைத்திலுமே அணுக்கதிர் வீச்சு ஒத்திகையில் போலீசார் செய்த ஆக்ஷன் ஸ்டன்ட்களை மட்டும் பிரதானப்படுத்தி செய்தி வெளியிடும் பத்திரிகைகள், அந்தப் பகுதியில் முகம் வீங்கி, கால் இழுத்துக் கொண்டு, கழுத்தில் தொங்கும் கட்டிகளுடன் திரியும் பயமுகங்களைப் பதிவு செய்யாமலே போய்விடுகிறார்கள்!

    இப்போதும் கூட இந்த விவரங்கள் எதையுமே தெரிந்து கொள்ள மறுக்கும் மூர்க்கமும் மூடத்தனமும்தான் அணுஉலை ஆதரவாளர்கள் மத்தியில் பார்க்க முடிகிறது. குறிப்பாக அணு உலைக்கான ஆதரவு என்பதைவிட, ‘ஜெயலலிதா சொல்லிவிட்டார், இனி போராட்டக்காரர்களை அடித்து நொறுக்கி தூக்கி வீசுங்கள்என்ற கண்மூடித்தனத்தை மட்டுமே இவர்களிடம் பார்க்க முடிகிறது.

சேர்த்து வைத்திருக்கும் இந்த அணுக் கழிவுதான் கடைசி சொத்தா?!
    மெத்தப்படித்த இந்த சுயநல கும்பலின் அவா, சக மனிதனை அவித்துத் திண்ணுவதுதானா.. எத்தனை கேவலம்!
நாம் இருக்கும்வரை எல்லாவற்றையும் அழித்து அனுபவித்து ஜாலியாக இருப்போம். பத்துவருடம் கழித்து எவனுக்கு என்ன வந்தால் என்னநம்மாளுங்கசௌக்யமாஇருந்தா போதும்எவன் வீட்டில் இழவு விழுந்தாலும், என் வீட்டில் கரண்ட் இருந்தா போதும்.’ என்ற வக்கிரப்புத்திக்காரர்களும் அவர்களின் நச்சுப் பிரச்சாரமுமே ஜெயலலிதா போன்றவர்களின் ஆணித்தரமான நம்பிக்கை.

    கல்பாக்கத்திலோ கூடங்குளத்திலோ என்ன நடந்தாலும், நமக்கென்ன ஆகிவிடப் போகிறதுநாம் பாதுகாப்பாகத்தானே இருக்கிறோம், என்ற அலட்சியமே இவர்களை இப்படியெல்லாம் பேச வைக்கிறது. அணுஉலைகளை ஆதரிப்பவர்கள் அனைவருக்கும் கூடங்குளத்திலோ, கல்பாக்கத்திலோ உத்தியோகம் கொடுத்து, ரொம்ப இல்லை ஜஸ்ட் மூன்றாண்டு காலம் இருந்து பார்க்கச் சொல்ல வேண்டும். குறிப்பாக திருமணமாகாத அல்லது திருமணமாகி குழந்தைப் பெறாதவர்களை. அன்றைக்குதான் இவர்களால் அணு உலைகளின் பாதிப்பைப் புரிந்து கொள்ள முடியும்!

-டாக்டர் எஸ் ஷங்கர் envazhi.com

No comments:

Post a Comment