Wednesday, 11 September 2013

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

கருகிப்போய்க் கிடந்தஇந் நாட்டிடை வந்தே

உருகி உருகி உயிரைத் தேய்த்தே
ஒளியைப் பரப்பிய

ஊழித் தலைவராம்
அளிசேர் எங்கள் அருமைப் பெரியார்
பேசிய பேச்சுகள் நச்சுகள் என்றால் -
ஊசிய

கருத்தை உரைத்த புராணங்கள்,
வேத அழுக்குகள், பொய்ம்மை விளக்கங்கள் -
ஊதை உளுத்தைகள் நச்சிலா உரைகளா?

சேற்றில் புழுக்களாய் - சிற்றுயிர் இனங்களாய் -
மாற்றிட இயலா மந்தை ஆடுகளாய் -
வழிவழிப் பார்ப் பனர் வந்து புகுத்திய
ஆரியக் கொடுநச் சரவம் கொத்திச்
சிறந்தநல் லறிவையும்
ஆயிரம் ஆயிரம் அறிவுநூல் தொகையை யும்

ஏயுநல் லிலக்கிய இலக்கண இயல்பையும்
நாகரி கத்தையும் நல்லபண் பாட்டையும்
ஆட்சி நலத்தையும்,
கொண்டஓர் இனத்தைப்
பெருங்கொள் கையினால் பிழைக்க வைத்த -
தன்மான ஊற்றினைத் தகைமைத் தலைவனை,
மண்மானங் காத்த மாபெரும் மீட்பனை,

அரியாருள் எல்லாம் அருஞ்செயல் ஆற்றிய
பெரியார் என்னும் பெரும்பே ரரசனை
இழிப்புரை சொல்வதா?

சொல்லியிங் கிருப்பதா ?

பழிப்புரை வந்துநம் செவிகளிற் பாய்வதா?

நச்சு விதைகளா, நயந்துஅவர் சொன்னவை?

பச்சிலை மருந்தன்றோ, எமக்கவர் பகர்ந்தவை?

பார்ப்பனப் பதடிகள் எம்மைப் படுத்திய
ஆர்ப்பொலி அடங்கியது அவரினால் அன்றோ?

ஆரியக் குறும்பர்கள் ஆக்கிய கொடுமையின்
வேரினைத் தீய்த்தது அவர்வினை யன்றோ?


- பாவலரேறு பெருஞ்சித்திரனார்